கடவுளுக்கு லஞ்சம்

தாங்கள் விரும்புவதை, ஆசைப்படுவதை செய்துதர வேண்டியது கடவுளின் கடமை என்பதுதான் மனிதனின் எண்ணம். அதற்காகவே பக்தி, பூஜை, வேண்டுதல் என்று என்னென்னவோ செய்கிறார்கள். கேட்பதை எல்லாம் கடவுள் கொடுத்துவிடுவாரா என்ன…?

கோயில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த ஞானகுருவிடம் வந்து நின்றாள் பெண் ஒருத்தி. கையில் கொஞ்சம் பிரசாதம், வாழைப்பழமும், கண்களில் கேள்வியும் இருந்தது பிரசாதத்தை கையில் கொடுத்துவிட்டு கேள்வியைக் கேட்டாள்.

‘’18 வாரமா வெள்ளிக்கிழமை விரதம் இருந்து 18 பேருக்கு பிரசாதம் கொடுக்கிறேன். என் பொண்ணுக்கு நல்ல வரன் அமையணும்னு சாமிகிட்டே வேண்டியிருக்கேன். இன்னும் ரெண்டு வாரத்துல விரதம் முடியப்போகுது, இன்னமும் வரன் வரலையே சாமி…’’

‘’இன்னும் ரெண்டு வாரம் இருக்கே.. சந்தேகம் இருந்தா நிறுத்திடு, சாமியா உன்கிட்டே விரதம் இருக்கச் சொல்லிச்சு?’’

‘’என்ன சாமி கோபப்படுறீங்க, 16 வாரமாச்சு, இன்னும் நல்ல செய்தி எதுவும் வரலை, அதான் நல்லதா சொல்வீங்கன்னு கேட்டேன்.. பாதியில நிறுத்துனா தெய்வகுத்தம் ஆயிடுமே…’’

‘’மேட்ரிமோனியல்ல பதிவு செஞ்சு தேடுறியா?’’

‘’அது நடக்குது சாமி, அங்கே எதுவும் அமையாமத்தான் இங்கே வந்திருக்கேன்..’’

‘’கடவுள் புரோக்கரா வந்து, உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து தரணுமா… கடவுள்கிட்டே கேட்கிறதுக்கு வேற எதுவும் உன்கிட்டே இல்லையா..?’’

‘’நமக்கு என்ன வேணுமோ, அதைத்தானே கடவுள்கிட்டே கேட்க முடியும்…’’

‘’அதுசரி, முன்கூட்டியே சம்பளத்தைக் கொடுத்துட்டு வேலை செய்யச் சொல்றே. ஆனா, கேட்கிறவங்களைவிட, எதுவும் கேட்காதவங்களுக்குத்தான் கடவுள் சீக்கிரமா காரியங்களை முடித்துக் கொடுப்பார்…’’

‘’அப்படின்னா..’’

‘’இன்னும் 18 வருஷம் காத்திரு…’’ திரும்பிப் படுத்தார் ஞானகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *