என் கணவர் என் மீது அளவுக்கு அதிகமாக அன்பாக இருக்கிறார். ஆனால் நிறைய கட்டுப்பாடுகளும் விதிக்கிறார். தங்கக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது போன்ற மனநிலையில் இருக்கிறேன். விடிவு எப்போது?
-நீலவேணி, சென்னை.
ஞானகுரு :
உன் மீது அவர் பாசம் காட்டவில்லை, ஏதோ இனம்புரியாத பயத்தில் இருக்கிறார். அதனால்தான் நிறையவே கட்டுப்பாடுகளை விதிக்கிறார். அன்பு செலுத்துபவர், அன்பு செலுத்தப்படுபவர் இருவரும் எவ்வித கட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் உயர்வானது.
தான் செய்யும் ஒரு செயல், தனக்கு நேசமானவர்களைப் புண்படுத்தும் என்று தெரிந்தும் கட்டுப்பாடுகள் விதிப்பவரை எப்படி அன்புமயமானவர் என்று ஏற்றுக்கொள்ள முடியும். நீ என்ன செய்யவேண்டும்… எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்புகளுடன் கணவர் இருக்கிறார் என்றால், அவருக்குத் தேவை மனைவி அல்ல…
சொன்னதைக் கேட்கும் பொம்மை. அன்பு கட்டுப்பாடு அற்றது… சுதந்தரமானது… பயம் இல்லாதது என்பதை கணவருக்குப் புரிய வை. சில நேரம் அதிர்ச்சி வைத்தியமே சரிப்பட்டு வரும், அதை எப்படிக் கொடுப்பது என்பதை நீயே முடிவு செய்.