தாஜ்மஹால், டெல்லி செங்கோட்டை, ஜாக் நீர்வீழ்ச்சி, ராஜஸ்தான் பாலைவனம் என்று பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு ஆசையாகப் போகிறேன். ஆனால், அங்கே நான் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை… எப்போது ஊருக்குத் திரும்பலாம் என்றுதான் தோன்றுகிறது. ஏன்?

-பி.ராஜ்தேவ், கோவை.

ஞானகுரு :

எதிர்பார்ப்புகள் இருந்தாலே ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும். அனுபவம் என்பது வேறு… அனுபவித்தல் என்பது வேறு. ஒரு இடத்திற்குச் செல்லும் முன்பு அதுபற்றிய கற்பனையில் திளைக்கிறாய். நேரில் காணும்போது, உன் கற்பனையைவிட குறைவாகவே சந்தோஷம் கிடைக்கும்.

ஏனென்றால், உன் அந்த கற்பனைக்கு எல்லைகளே கிடையாது. தாஜ்மஹால் வான் அளவுக்கு உயரமாக… வெள்ளை வெளேர் என்று சுத்தமாக… தெய்வீக அமைதியுடன் திகழ்வதாக நினைத்திருப்பாய். ஆனால், நேரில் பார்க்கும்போது கசகசவென மக்கள் கூட்டத்துடன், ஆங்காங்கே குப்பை கூளங்களுடன் பார்க்கும்போது, உன் கற்பனையில் கிடைத்த சந்தோஷம் முற்றிலும் சிதைகிறது.

உண்மையில் ஒன்றை அனுபவிக்க வேண்டும் என்றால் எவ்வித முன்முடிவும் இல்லாமல், நேரடியாக அனுபவித்தலில் இறங்கு.

Leave a Reply

Your email address will not be published.