என் மாமியாருடன் நான் சமாதானமாகச் செல்ல வழியே இல்லையா?
-பி.மாரீஸ்வரி, சென்னை.
ஞானகுரு :
தனிக்குடித்தன ஆசையை மனதில் வைத்துக்கொண்டு மாமியாருடன் இணைந்து நடக்க நினைத்தால், அந்தப் பாதை ஊர் போய் சேராது. காட்டை அதிரவைக்கும் சிங்கத்தை ஒரு வளையத்துக்குள் சென்றுவரும்படி பழக்க முடியும் எனும்போது, ஒரு பெண்ணை வளைக்க முடியாதா?
கணவனை வெல்வது எளிது… அதனால் பலரும் முதலில் கணவனை வென்றுவிட்டு பின் மாமியாரை வெல்ல நினைத்து காயப்படுகிறார்கள். முதலில் மாமியாரை வெற்றி கொள்… இணைந்து நடக்க நினைக்கவேண்டாம். ஒரு மகள் போன்று சரண் அடைந்துவிடு. நீ எதிரி இல்லை என்பது அந்தப் பெண்ணுக்கு உறுதியாகத் தெரியவேண்டும், அந்த காலம் வரும்வரை காத்திரு… தாய்ப்பசுவை வென்றுவிட்டால், கன்றுக்குட்டி தலையை ஆட்டிக்கொண்டு வந்துவிடும்.
அதற்காக தனிக்குடித்தன சந்தோஷத்தை அனுபவிக்கவே முடியாதா என்ற ஆதங்கம் வேண்டாம். தனிக்குடித்தனம் என்பது ஒரு மரத்தில் பழம் பழுப்பது போன்று தானாகவே நிகழும்… அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் முக்கியம். பல வீடுகளில் அடித்துப் பழுக்க வைப்பதால்தான், தனிக்குடித்தனம் என்பது வெம்பிப் போன பழம் போன்று எதற்கும் பயன்படாத ஒன்றாக இருக்கிறது.