நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். ஆனால், அவள் என்னை விரும்புகிறேன் என்பதை அறிந்துகொள்ளாமல் காதலைச் சொல்ல தயக்கமாக இருக்கிறது. அவள் மனதில் நான் இருக்கிறேனா என்பதை எப்படி அறிந்துகொள்வது?
– வே.மாறன், சென்னை.
ஞானகுரு:
ஒரு பெண் காதலித்தால், அது அவளுக்கு மட்டும்தான் தெரியும். அதுவே ஆண் காதலித்தால், அந்தப் பெண்ணைத் தவிர அத்தனை பேருக்கும் தெரியும். பெண்ணின் மனதில் நீ இருக்கிறாயா இல்லையா என்பது இங்கே முக்கியம் அல்ல. அந்தப் பெண்ணை நீ எத்தனை தூரம் நேசிக்கிறாய்…
அவள் முன்னேற்றத்துக்காக நீ என்னவெல்லாம் செய்வாய்… அவள் கட்டிய புடவையுடன் வந்தால் ஏற்றுக்கொள்ளத் தயாரா… அவள் காதலுக்காக உன் குடும்பத்தை இழக்கத் தயாரா… அவளிடம் எத்தனை குறைகள் இருந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு காலமெல்லாம் வாழத் தயாரா…
எதிர்காலத்தில் அவள் உன்னை விட்டு பிரிய விரும்பினால், அதற்கும் மனப்பூர்வமாக சம்மதிப்பாயா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் உன்னிடம் விடை கேள். இதற்குப் பின்னும் அந்தப் பெண்ணின் மீது காதல் இருந்தால், நம்பிக்கையுடன் அந்தப் பெண்ணிடம் உன் காதலைச் சொல்.
உன்னை அவள் ஏற்றுக்கொண்டால் நீ ஜெயிப்பாய்… அல்லது உன் காதல் ஜெயிக்கும்.