நண்பர்கள் மீது மிகவும் பிரியமாக இருக்கிறேன். ஆனால், அவர்கள் என்னிடம் பணம் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. துரியோதனன், கர்ணன் போன்று நட்போடு இருப்பதெல்லாம் இதிகாசத்தில் மட்டும்தான் சாத்தியமா? – என்.பரந்தாமன், சென்னை.
ஞானகுரு :
நெஞ்சில் குத்துபவனே நல்ல நண்பன். கர்ணன் நல்ல விசுவாசியே தவிர, சிறந்த நண்பன் அல்ல. பாஞ்சாலியின் சேலை உரியப்பட்ட தருணத்தில் தடுத்து இருந்தால், பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களாவது தர துரியோதனை சம்மதிக்க வைத்திருந்தால்தான், அவன் நல்ல நண்பன். குருஷேத்திரப் போரில் கர்ணனுக்கு சல்லியன் சிறந்த நண்பனாக இருந்தான்.
நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் நெஞ்சுக்கு குறி வைக்கச் சொன்னான், அதுதான் வெற்றிக்கு வழி என்று எடுத்துச் சொன்னான். ஆனால், கர்ணன் அதை அலட்சியப்படுத்தியதால் குறி தவறியது. இனி வெற்றி கிட்டாது என்பது தெரிந்ததும் போரில் இருந்து வெளியேறினான் சல்லியன்.
உன் நெஞ்சில் குத்துபவனை மதித்து பாராட்டு. உன்னை பாராட்ட மட்டுமே செய்பவனை தள்ளி வை.