குழந்தையை அடித்தால் பூமி அதிர்ச்சி ஏற்படும் என்று ஏன் கதை கட்டுகிறார்கள்?

-என்.பாலசுப்பிரமணியன், விருதுநகர்.

ஞானகுரு :

உயிர் இல்லாத பந்தை கீழே போட்டால், எழும்பி வரும். இரும்பைக் கீழே போட்டால் சப்தம் வரும்… கீழே விழுந்த இடம் பாதிப்பு அடையும். ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருந்தே தீரும். அண்டை வீட்டுக்காரன் ஒரு பந்து வாங்கிய காரணத்தால், உன் மனைவி உன்னை விட்டு பிரிய நேரிடலாம் தெரியுமா?

பக்கத்து வீட்டுக் குழந்தை புதிய பந்தை எடுத்து விளையாட, அது உன் வீட்டு ஜன்னலில் விழுந்து கண்ணாடி உடைய, நீ சண்டைக்குப் போக, பக்கத்து வீட்டுக்காரன் உன்னைத் தாக்க முயல, நீ பயந்து போய் திரும்பிவர, ஆவேசமான உன் மனைவி சண்டைக்குப் போக, அவளை அவன் அவமரியாதை செய்ய, உன் மீது நம்பிக்கை இல்லாமல் மனைவி காவல்துறைக்குப் போக, அதனால் கோபமடைந்த அண்டை வீட்டுக்காரன் ஆட்களைக் கூட்டிவந்து உன் மனைவியை அடிக்க, எதையும் தடுக்க முடியாத உன்னுடன் வாழ்வதைவிட தனியாக இருக்கலாம் என்று தாலியைக் கழட்டி எறிந்துவிட்டுச் செல்லவும் வாய்ப்பு இருக்கலாம் என்பதை நீ நம்பினால், குழந்தையை அடித்தால் பூமி அதிரும் என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

மனிதர்கள் இந்த பூமியின் விருந்தினர்கள். அதனால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாமல், பூமிக்கும் வலிக்காமல் செயலாற்றிச் செல்வதுதான் நல் வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published.