கடவுள் மனிதனை படைத்தானா? அல்லது மனிதன் கடவுளை படைத்தானா? -எஸ். சுந்தரேசன், மதுரை

ஞானகுரு :

இதில் மனிதர்களுக்கு ஏன் சந்தேகம் வருகிறது என்பது எனக்கு புரிவதேயில்லை. கண்டிப்பாக மனிதன்தான் கடவுளை படைத்திருக்கிறான். எந்த மிருகத்திற்கும், பறவைக்கும் கடவுள் தேவையில்லை என்பதால், அவை படைத்திருக்க வாய்ப்பேயில்லை. மேலும் அவைகளுக்கு இதுபோன்று புத்திசாலித்தனமாக படைக்கவும் தெரியாது.

சுயம்புவாக தோன்றியதாக சில சிலைகளை காட்டுவார்கள், சில மரத்தடி வேர்களைக் காட்டுவார்கள். அவை இயற்கைதானே தவிர யாருக்கும் தெரியாமல் வேறு கிரகத்தில் இருந்து திடீரென முளைத்தது அல்ல. மேலும் பார்க்கிற கண்களுக்கு மட்டுமே அது கடவுள். அதனால் இந்த பூமியில் இருக்கும் எல்லா மதத்தின் கடவுளும் மனிதனால் படைக்கப்பட்டவைதான்.


சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் சண்டை போட்டு மனிதன் தோற்கவும் செய்தான், ஜெயிக்கவும் செய்தான் என்றாலும் அதற்கு அவன் பயப்படவில்லை. ஆனால் பாம்பு சாதாரணமாக தீண்டினாலே மரணம் வருவதை அறிந்த மனிதன், அதற்கான உண்மையான காரணம் தெரியாததால் பயந்தான். இடி, மின்னல், மழை, நெருப்பு போன்றவற்றுடன் மனிதனால் போராட முடியவில்லை. அவனால் அழிக்கமுடியாத பெரும் சக்திகளை கண்டு பயந்து அவற்றை எல்லாம் ‘கடவுள்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினான்.

ஆக, கடவுள் தோன்ற முதல் காரணம் பயம். அன்று மட்டுமல்ல இன்றும் கடவுள் உலகெங்கும் நிறைந்திருக்க காரணம் பயம்தான். ஆதிமனிதனுக்கு இருந்த அதே பயம், இன்று வெவ்வேறு ரூபத்தில் மனிதனை சித்ரவதை செய்கின்றன. தன்னுடைய பயம் தெரியக்கூடாது என்பதால், கடவுளுக்கு பயங்களை எல்லாம் வெல்லக்கூடிய பெரும் சக்தியும், பிரமாண்ட உருவமும் படைத்தான். கடவுள் சொன்னபடி கேட்கவேண்டும் என்பதற்காக லஞ்சம் போன்று, அவனுக்கு பிடித்ததை எல்லாம் படைத்துவைத்து கும்பிடத் தொடங்கினான்.

மேலும் தான் உருவாக்கிய கடவுள் தன்னை விட்டு வேறு எங்கும் போய்விடக் கூடாது என்று சுற்றிலும் ஒரு வேலிபோட்டு கைதியாக மாற்றினான். அதையே ஆலயம் என்று சொல்லிக் கொண்டு, அங்கேதான் கடவுள் இருக்கிறார் என தேடத் தொடங்கினான்.

அன்று முதல் இன்றுவரை எவருமே கடவுளைத் தேடி கண்டதேயில்லை என்பதுதான் விசித்திரமான உண்மை. கடவுளைக் கண்டேன், கடவுளிடம் பேசுகிறேன் என்று எவராவது சொன்னால் ஒன்று அவர் பைத்தியமாக இருக்க வேண்டும், அல்லது மிகப் பெரிய அயோக்கியனாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *