ஞானகுரு.
குற்றால மலையின் ஒவ்வொரு அருவியும், மரமும், பாறையும் இவருக்கு கரும்பலகை. விழித்திருந்து மலைகளையும் மரங்களையும் வேடிக்கை பார்த்த இரவுகள் ஏராளம். அருவி நீரைக் குடித்து பல மாதங்கள் பசி மறந்திருக்கிறார். இயற்கைக்குள் விடை ஒளிந்திருக்கும் என்ற நம்பிக்கைதான் அவரது தேடல். ஏதோ ஒரு நள்ளிரவில் புள்ளியாக விடை கிடைத்தது.
மலைக்கு நன்றி சொல்லி மனிதர்களுடன் கலந்துவிட்டார். மரமும், மலையும், அருவியும் தினமும் புதிதாய் பிறக்கின்றன. மற்ற உயிர்களைப் போலவே மரங்களும் நகர்கின்றன, இயற்கையுடன் இணைந்து நடந்தால் வலியும் வேதனையும் இல்லையென்று வழிகாட்டியதை மனிதன் கண்டுகொள்ளவில்லை.
மனிதனின் விசித்திரம் புரிந்தது. உண்மையைக் கேட்க மனிதன் விரும்புவதில்லை. இயற்கையும் இறைவனும் மனிதனுக்குத் தேவையில்லை. ஆரோக்கியத்தைவிட செல்வமே அவன் விருப்பம். அமைதியைவிட ஆனந்தத்திற்கே முன்னுரிமை. தான் மட்டுமே உசத்தியெனும் அகம்பாவம். தனக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் உலகை வெல்லலாம் அசட்டு நம்பிக்கை. மரணம் வராது என்ற எண்ணங்களின் கூட்டுதான் மனிதன்.
பிறப்பு, வளர்ப்பு, ஆசை, வெற்றி, போராட்டம், மரணம் வெவ்வேறு திசையில் என்றாலும், எல்லா மனிதர்களும் ஒரே கயிறில் கட்டப்பட்ட பொம்மைகள். ஆட்டுவிப்பவன் யாரென்று அறியா பொம்மைகள். எதற்கெடுத்தாலும் அச்சப்படும் பொம்மைகள்.
மலையும், மரமும் அழைக்கும் வரை, இவர் மனிதர்களின் அச்சத்தை நகர்த்தி வெளிச்சத்தைக் காட்டுவார். இவருக்குப் பின் வேறு ஒருவர் குற்றால மலையில் இருந்து மனிதனை மீட்க வருவார்.
அவரும் ஞானகுரு.