மூன்றாவது கண்

மனிதர்கள் அனைவருக்கும் புறக் கண்கள் இரண்டு. ஆனால், உடல் முழுவதும் ஆயிரம் கண்கள் உண்டு. அவற்றில் இருந்து ஒரே ஒரு கண்ணை மட்டும் திறந்துவிட்டால் போதும், வாழ்க்கையை புதிய வழியில் காண முடியும்.

அதனை மனிதனிடம் தட்டியெழுப்புவது என்னுடைய வேலை இல்லை. ஆனால், என்னை தேடி வருபவர்களுக்கு வழி காட்டுகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் என் கையில் உள்ளதை விதைத்துச் செல்கிறேன். நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற ஞானகுருக்கள் அத்தனை பேரும் அப்படித்தான்.

என்னை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் எளிது. ஆம், கோயில்களில் என்னைக் காணலாம். நான் கோயிலுக்குச் செல்வது  இறைவன் தரிசனத்துக்காக அல்ல, மனிதனை வேடிக்கை பார்க்கத்தான். சிலர் பிச்சைக்காரனாக கெஞ்சுவார்கள், இன்னும் சிலர் கடவுளுக்கு பிச்சை போடுவார்கள், சிலர் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். விதவிதமான நடிகர்களைப் பார்க்க முடியும். பிரசாதமும் தேடிவந்து விழுந்துவிடும் என்பதால் வயிற்றுக்கும் நல்லது.

என் சோம்பேறித்தனத்தால் வளர்ந்து கிடக்கும் சடைமுடி, தாடியைப் பார்த்து சிலர் காலில் விழுந்து ஆசி கேட்பார்கள். காசா… பணமா? சந்தோஷமாக அள்ளிக் கொடுப்பேன். அதிகாலையில் குளித்து, காவியுடை உடுத்தி, நெற்றி நிறைய திருநீறு வைத்துக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் கோயிலில் உட்கார்ந்தே பொழுதை போக்கும் சுகம் இருக்கிறதே… அட சொர்க்கம்தான்.

என்னைப் போலவே அவ்வப்போது பல ஊர் சுற்றி சாமியார்கள் வந்து சேர்வார்கள். அவர்களை கொஞ்சம் இளக வைத்தால் எத்தனையோ தத்துவங்கள் கொட்டும். நான் இந்த நாடோடிகளிடம் கற்றுக்கொண்டது ஏராளம். மற்றபடி வேதங்கள், இதிகாசங்கள், சித்தர் பாடல்கள், இலக்கியங்கள், அறிவியல், வரலாறு என எதையும் நான் கரைத்துக் குடித்தவன் இல்லை. இந்த உண்மையைச் சொன்னாலும் பலர் நம்புவது இல்லை.

எனக்கு ஒரு உண்மை தெரியும். மனிதர்களுக்குக் கேள்வி கேட்பதில் ஆர்வம் அதிகம். அதேநேரம்,  தங்களுக்கு சாதகமான பதில் வர வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.  மனதுக்குப் பிடிக்காத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத பதில் வந்தால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் நினைக்கும் அல்லது விரும்பும் பதில் வரும்வரை புதுப்புது ‘குருமார்’களைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.

சீடர்கள், ஆசிரமம், விழிப்பு உணர்வுக் கூட்டங்கள், புத்துணர்ச்சி முகாம்களில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. இதுபோன்ற பிம்பங்களுடன் என்னை அணுகுபவர்களை விரட்டியடிப்பதுதான் என் முதல் வேலை. யாரையும் தேடிப் போய் பேசுவது இல்லை… தேடி வரும் அனைவரிடமும் பேசுவது இல்லை. பேசவேண்டும் என நினைத்தால் பேசுவேன் அல்லது முகம் திருப்பி படுத்துக் கொள்வேன். சும்மா படுத்துக் கிடப்பதில்தான் எத்தனை சுகம்…

மனிதர்களுக்கு என்னால் வழி காட்ட முடியும் என்று என்னைவிட பலரும் நம்புகிறார்கள். அதனால் நான் குற்றால மலைகளில் தெளிவடைந்ததை அவ்வப்போது அள்ளிவிடுகிறேன். சிலருக்கு அதிர்ச்சியாகவும், சிலருக்கு பூவாகவும் விடியல் வரும்.

சிலருக்கு சட்டென்று மூன்றாவது கண் பூவாக மலர்ந்துவிடும். துன்பங்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நிம்மதியாக வாழும் வழியை அறிந்துகொள்வார்கள். அந்த வழியை அத்தனை மனிதர்களும் அறிந்துகொள்ளவே இந்த பயணம். படகில் ஏறுங்கள். காற்றடிக்கும் திசையில் செல்லலாம்.

கண்கள் தானாகவே திறந்துவிடும்.