மலையும் இவரே… அருவியும் இவரே…

குற்றால மலையையும், அருவியையும் சந்திக்கச் சென்ற நேரத்தில், இரண்டும் ஒன்றாக கலந்துசெய்த ஒரு மனிதனை சந்திக்க நேர்ந்தது. ஆம், குற்றால மலையில், ஒரு நல்ல மழை நேரத்தில் ஞானகுரு அறிமுகம் கிடைத்தது.

நாக்குக்குப் பதில் கத்தி இருக்கிறதோ என்றுதான் முதல் சந்திப்பில் நினைக்கத் தோன்றியது. கோபத்துடன் திரும்பிவந்து, ஆத்திரம் அடங்கியபிறகு யோசித்ததில்… உண்மைக்குத்தான் அத்தனை வலிமை என்பது புரிந்தது. மீண்டும் சந்திக்கச் சென்றதில் ஏமாற்றமே…

 

இரண்டு வருடங்கள் கழித்து திருப்பரங்குன்றம் மலை மீது மீண்டும் தரிசனம். புளகாங்கிதத்துடன் அருகே சென்றதும், மீண்டும் வாயில் இருந்து நெருப்புதான் கொட்டியது. இந்த முறை விலகாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். என்னைவிட்டு விலகிச் சென்றாலும் தேடிச் சென்றேன். விரட்டியடிக்காத குறைதான். எப்படியோ அடுத்த இரண்டு வருடங்களில் புன்னகை வந்தது.

 

அவர்  இதிகாசம், செய்திதாள் படித்து நான் பார்த்ததில்லை, ஆனால் இன்றைய அரசியல் வரை பேசினார். எழுதப் போகிறேன் என்றதும், ‘ஏமாந்து போவாய்’ என்று எச்சரிக்கை செய்தார். ஆனாலும் நச்சரித்தே அனுமதி பெற்றேன். ஜூனியர் விகடன் இதழில், ‘ஞானகுரு’ தொடராக வந்தது முதல், அவருக்குத்தான் எத்தனைவகையான ரசிகர்கள், பக்தர்கள்!

 

அவரிடம் என் சொத்துக்களை எழுதிக் கொடுத்துவிட்டு நிம்மதியாகச் சாகவேண்டும் என்று ஆசைப்பட்டவர் தொடங்கி, என் பையனுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கணும், எங்கே இருக்கார், எவ்வளவு வாங்குவார் என்று விவரம் கேட்டவர்கள் வரை எண்ணிக்கை ஏராளம்.

 

‘சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம், புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலா வரும் ஞானகுருவை சந்தித்தே தீரவேண்டும்…’ என்று சிலர் விடாப்பிடியாக அடம்பிடிக்கவே ஞானகுருவிடம் பேசினேன்.

 

‘நீ எழுதிய எழுத்துகளில் மட்டுமே நான் இல்லை… அதனால் உன் எழுத்து பிம்பத்தோடு என்னை சந்திப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள், வேண்டாம்’ என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னார்.

 

‘நேரில் சந்திக்கத்தான் விருப்பம் இல்லை… அவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது பதில் தரலாமே…’ என்று கேட்டபோது கேலியாக சிரித்தார்.

 

‘என் கேள்விகளுக்கு நீ யாரிடமாவது விடை பெற்றுக்கொடு’ என்று மீண்டும் முருங்கை மரம் ஏறியவரை பூமிக்கு இழுத்துவந்தது, பெரும்பாடு.

 

‘தன்னைப் பற்றி… எதிர்காலம் குறித்து… பேராசை கேள்விகளை எடுத்துவந்தால் கையை உடைப்பேன்’ என்று சிரித்தார். அதனால் மிகவும் கவனமுடன் சிலரது கேள்விகளை எடுத்துச் சென்றேன். அதிலும் சில கேள்விகளுக்கே விளக்கம் கிடைத்தது, அதை பதில் என்று சொல்லக்கூடாதாம். இப்போதும் என்னுடைய இ.மெயில் முகவரிக்கு நிறைய கடிதங்களை தெரிந்தவர்களும், அறிந்தவர்களும் அனுப்புகிறார்கள். அவ்வப்போது ஞானகுருவிடம் காட்டி நானும் தெளிவடைய முயற்சி செய்கிறேன். பதில் பெற்றவர்கள் அடைந்த ஆனந்தமும், நிம்மதியும் எழுத்தில் வர்ணிக்க முடியாதது.

 

‘ஞானகுருவை ஒரே ஒரு முறை தூரத்தில் இருந்து தரிசிக்க மட்டுமாவது வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஏன்,  நீங்களும் கேட்கலாம்.

அனைவருக்குமான பதில் இதுதான்…

 

‘ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல் சுழன்று கொண்டு இருப்பவர். ஆனாலும் குற்றால மலை மீது காதலுடன் இருப்பவர் என்பதால் அடிக்கடி குற்றாலம் போகிறவர்கள் ஒரு வேளை பார்த்திருக்கலாம். ‘இவர்தான் ஞானகுரு’ என்று உங்களால் கணிக்க முடியாதபடி ஆனால் பார்த்தவுடன் சுண்டியிழுக்கும் இழுக்கும் ஒரு மனிதரைக் கண்டுவிட்டால், அவர்தான் ஞானகுரு என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

அவரை கண்டுகொள்ளும் வாய்ப்பு கிடைத்துவிட்டால்… ஆஹா நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்.